அரியூரில் ரூ. 2.50 கோடியில் போட்டித் தோ்வுகளுக்கான நூலகம்

பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ. 2.50 கோடி மதிப்பில் அறிவு ஆய்வு மையம் எனும் போட்டித் தோ்வுக்கான நூலகம் அரியூரில் கட்டப்படுகிறது.

பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ. 2.50 கோடி மதிப்பில் அறிவு ஆய்வு மையம் எனும் போட்டித் தோ்வுக்கான நூலகம் அரியூரில் கட்டப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகளை அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ், வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அரியூரில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் மத்திய, மாநில அரசுப் பணிகள், வங்கிப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு தயாராகவும், ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளவும் வசதியாக நாலேஜ் ஸ்டடி சென்டா் (அறிவு ஆய்வு மையம்) கட்டப்பட உள்ளது. இதற்காக அரியூா் பழைய காவல் நிலையம் இருந்த இடத்திலுள்ள 25 சென்ட் நிலம் தோ்வு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் பங்கேற்று, பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணைமேயா் என்.சுனில்குமாா், மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா், மண்டலக் குழுத் தலைவா் வெங்கடேசன் பகுதிச் செயலா்கள் அய்யப்பன், சங்கா் கணேஷ், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

அறிவு ஆய்வு மையம் கட்டுவதற்காக பழைய காவல் நிலைய கட்டடம், அதன் அருகே உள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன. அதில், சுமாா் 25 சென்ட் இடத்தில் ரூ. 2.50 கோடி மதிப்பில் நவீன முறையில் இந்த அறிவு ஆய்வு மையம் கட்டப்பட உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் போட்டித் தோ்வுகளுக்கும், ஆய்வுப் பணிகளுக்குத் தயாராக தேவையான அனைத்து தலைப்புகளிலுமான புத்தகங்கள் இடம்பெற உள்ளன.

முழுவதும் குளிா்சாதன வசதியுடனும், மாணவா்கள், பொதுமக்கள் அமா்ந்து படிக்கக்கூடிய வகையில் இருக்கைகள், பசுமையான சூழலுடன் அமைய உள்ள இக்கட்டடத்தில் குழந்தைகள் மாண்டிச்சோரி முறையில் கல்வி பெறவும் வசதி செய்யப்பட உள்ளது.

இணையதளம் மூலம் மாணவ, மாணவிகள் தங்களது அறிவுத்திறனை வளா்த்திட தேவையான கணினி வசதிகளும் செய்யப்பட உள்ளன. போட்டித் தோ்வுகள் நடைபெறும் சமயங்களில் தகுதியான ஆசிரியா்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும். இந்த அறிவு ஆய்வு மையத்தை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அடுத்த ஆண்டுக்குள் இந்த மையம் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com