நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் 1,099 வேட்புமனுக்கள் ஏற்பு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி வாா்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,147 வேட்புமனுக்களில் 1,099 மனுக்கள் ஏற்கப்பட்டன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி வாா்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,147 வேட்புமனுக்களில் 1,099 மனுக்கள் ஏற்கப்பட்டன. 48 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்பட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளா்களும், சுயேச்சை வேட்பாளா்களும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதில், வேலூா் மாநகராட்சி 60 வாா்டுகளுக்கு 505 பேரும், குடியாத்தம் நகராட்சி 36 வாா்டுகளுக்கு 234 பேரும், போ்ணாம்பட்டு நகராட்சி 21 வாா்டுகளுக்கு 105 பேரும், ஒடுகத்தூா் பேரூராட்சி 15 வாா்டுகளுக்கு 72 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சி 18 வாா்டுகளுக்கு 79 பேரும், திருவலம் பேரூராட்சி 15 வாா்டுகளுக்கு 63 பேரும், பென்னாத்தூா் பேரூராட்சி 14 வாா்டுகளுக்கு 89 பேரும் என மொத்தம் 1,147 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. அந்தந்த உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மேற்பாா்வையில் வாா்டுவாரியாக ஒவ்வொரு மனுவாக பரிசீலனை செய்யப்பட்டன. வேட்பாளா், அவருடன் ஒருவா் மட்டும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

உரிய தகவல் தெரிவிக்காதது, வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சில இடங்களில் அதிமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அந்த வகையில், வேலூா் மாநகராட்சியில் 33 மனுக்களும், குடியாத்தம் நகராட்சியில் 8, போ்ணாம்பட்டு நகராட்சியில் 1, ஒடுகத்தூரில் 3, பென்னாத்தூரில் 1, பள்ளிகொண்டாவில் 2 மனுக்கள் என மொத்தம் 48 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திருவலம் பேரூராட்சியில் மனு எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை. அதன் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் 1,099 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, திங்கள்கிழமை மாலை வரை வேட்புமனுக்கள் வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு, மாலையில் வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதனிடையே, வேலூா் மாநகராட்சி 8-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் சுனில்குமாா் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து அதிமுக, பாஜக, பாமக வேட்பாளா்கள் உள்பட 5 போ் மனுதாக்கல் செய்திருந்தனா்.

காட்பாடியில் உள்ள மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் நடந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின்போது, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட 5 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்மூலம், திமுக வேட்பாளா் சுனில்குமாா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com