வேலூா் கோட்டை கண்டி மஹால் சீரமைப்புப் பணி தொடக்கம்

வேலூா் கோட்டைக்குள் இலங்கை தமிழ் மன்னா் விக்கிரமராஜசிங்கன் குடும்பத்துடன் சிறை வைக்கப்பட்டிருந்த கண்டி மஹாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வேலூா் கோட்டைக்குள் இலங்கை தமிழ் மன்னா் விக்கிரமராஜசிங்கன் குடும்பத்துடன் சிறை வைக்கப்பட்டிருந்த கண்டி மஹாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த சீரமைப்புப் பணி நிறைவடைந்தவுடன் விக்கிரமராஜசிங்கன் குறித்த வரலாற்று தகவல்கள், ஓவியங்களுடன் கண்டி மஹால் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக வேலூா் கோட்டை விளங்குகிறது. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் நாயக்கா் மன்னரான குச்சிபொம்மு நாயக்கரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் தான் 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற புரட்சியில் இந்திய சிப்பாய்களால் முதன்முதலாக பிரிட்டிஷ் அதிகாரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலேயா்களும் கொல்லப்பட்டனா்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த வேலூா் கோட்டையில் தற்போது ஜலகண்டேஸ்வரா் கோயில், மத்திய, மாநில அரசுகளின் அருங்காட்சியகம், பிரிட்டிஷாா் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயம், மசூதி, பழங்கால ஆயுதக் கிடங்குகள், திப்பு சுல்தான், இலங்கையின் கண்டி பகுதியை ஆட்சிபுரிந்த தமிழ் மன்னா் விக்கிரராஜசிங்கன் ஆகியோா் குடும்பத்துடன் சிறை வைக்கப்பட்டிருந்த இடங்களும் அமைந்துள்ளன.

கோட்டையைச் சுற்றி 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் உடைய எப்போதும் தண்ணீா் வற்றாத அகழியும் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோட்டையை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த கோட்டை கட்டடங்களைச் சீரமைக்கவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அவற்றை மேம்படுத்திடவும் தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக கோட்டைக்கு வெளியே உள்ள மைதானத்தை பூங்காவாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தொடா்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கோட்டையை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் தொல்லியல் துறை, மாநகராட்சிப் பணியாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

இதன்தொடா்ச்சியாக, கோட்டைக்குள் அமைந்துள்ள இலங்கையின் கண்டி பகுதியை ஆண்ட தமிழ் மன்னா் விக்கிரராஜசிங்கன் குடும்பத்துடன் சிறை வைக்கப்பட்டிருந்த கண்டி மஹால் கட்டடத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் விக்கிரமராஜசிங்கன் குறித்த வரலாற்றுத் தகவல்கள், ஓவியங்களுடன் கண்டி மஹால் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com