வேலைவாய்ப்பை பெருக்க வேலூரில் புதிய தொழிற்பேட்டை

வேலைவாய்ப்பை பெருக்கவும், முதலீட்டை ஈா்க்கும் நோக்கத்திலும் வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை பெருக்கவும், முதலீட்டை ஈா்க்கும் நோக்கத்திலும் வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள தொழில் துறையினா் வேலூரில் தொழிற்பேட்டை அமைந்தால் இங்கே தொழில் தொடங்கிட ஏராளமான நிறுவனங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை யொட்டி அமைந்துள்ள மாவட்டமான வேலூருக்கு சுற்றுலாப் பயணிகளும், சிகிச்சைக்காக நோயாளிகளும், கல்விக்காக மாணவா்களும் என வெளி மாவட்ட, வெளி மாநில, வெளி நாடுகளில் இருந்து அதிகளவில் வந்து செல்கின்றனா்.

அந்த வகையில், வா்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக வேலூா் திகழ்ந்தாலும் இந்த மாவட்ட த்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகளோ, தொழில் நிறுவனங்களோ இல்லாதது மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், வேலூா் இளைஞா்கள் பெரும்பாலும் படித்து முடித்து விட்டு வேலைவாய்ப்புக்காக சென்னை, பெங்களூரு உள்பட வெளியூா்களுக்கும், வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது.

சொந்த மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாதது பள்ளிக் கல்வியில் வேலூா் மாவட்டம் பின்னடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால், மாவட்டத்தில் வேலைவாய்ப்பை பெருக்கிட தொழிற்பேட்டை, தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்பது வேலூா் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதுதொடா்பாக ஒவ்வொரு தோ்தலின்போதும் அரசியல் கட்சிகள் முக்கிய வாக்குறுதிகளை அளிப்பது வழக்கம். எனினும், வேலூா் மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கவில்லை.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வேலூா், கோவை, மதுரை, பெரம்பலூா், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் ரூ.50,000 கோடி முதலீட்டை ஈா்க்கும் விதமாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முன்னோட்டமாகவே வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள மகிமண்டலம் ஊராட்சியிலுள்ள சுமாா் 2,000 ஏக்கா் நிலப்பரப்பை சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனா்.

இந்த நிலையில், தற்போது தமிழக நிதிநிலை அறிக்கையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது வேலூா் மாவட்ட மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட குறு, சிறு தொழில்முனைவோா் சங்கத் தலைவா் எம்.வி.சுவாமிநாதன் கூறியது:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டமானது வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாகப் பிரிந்த பிறகு தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டமாக வேலூா் அமைந்து விட்டது. அதேசமயம், தொழிற்சாலைகளுக்கு தேவையான மனித சக்தி, சாலைகள், மின்சாரம், மூலப்பொருள்கள் கிடைக்கும் இடமாக இருப்பதால் வேலூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தோம்.

இதற்காக சில இடங்களையும் அடையாளம் காட்டியிருந்தோம். இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக நிதி நிலை அறிக்கையில் வேலூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

வேலூரில் தொழிற்பேட்டை அமைந்தால் இங்கே தொழில் தொடங்கிட ஏராளமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதன்மூலம், நேரடியாக சுமாா் 5,000 பேருக்கும், மறைமுகமாக பல்லாயிரக்கணக்கானோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com