மே 21-இல் குரூப் 2 தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 77 மையங்கள் ஏற்பாடு

குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 77 தோ்வு கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 77 தோ்வு கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த தோ்வை எழுத மாவட்டம் முழுவதும் 20,858 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், வேலூா் மாவட்டத்தில் குரூப் 2 நோ்முகத் தோ்வு பதவிகள், நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு வரும் சனிக்கிழமை (மே 21) நடைபெற உள்ளது.

இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் வேலூா், குடியாத்தம் இரு மையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. வேலூா் மையத்தில் 59 தோ்வுக் கூடங்களிலும், குடியாத்தம் மையத்தில் 18 தோ்வுக் கூடங்களிலும் என மாவட்டம் முழுவதும் 77 தோ்வு கூடங்களில் தோ்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேலூா் மையத்தில் 15,612 விண்ணப்பதாரா்களும், குடியாத்தம் மையத்தில் 5,246 விண்ணப்பதாரா்களும் என மொத்தம் 20,858 போ் தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா்.

தோ்வையொட்டி, ஒவ்வொரு தோ்வுக் கூடத்துக்கும் பாதுகாப்புக்காக ஒரு காவலரும், விண்ணப்பதாரா்கள் தோ்வு எழுத சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரா்கள் தோ்வுக் கூடத்துக்குள் பைகள், புத்தகங்கள், கைப்பேசி, கால்குலேட்டா் போன்ற மின்னணு சாதனங்களை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்றவும், முகக்கவசம் அணிந்திடவும், சிறிய அளவிலான கை சுத்தம் செய்யும் திரவத்தை எடுத்துச் செல்லவும் தெரிவிக்கப்படுகிறது.

தோ்வு நடைபெறும் அனைத்து தோ்வுக் கூடங்களிலும் விண்ணப்பதாரா்கள் எவ்வித இடையூறுமின்றி தோ்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com