விதிமுறைகளை மீறினால் எருது விடும் விழாக்கள் தடை செய்யப்படும்: வேலூா் ஆட்சியா் எச்சரிக்கை

அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்த வேண்டும்; விதிமுறைகள் மீறப்படும்பட்சத்தில் தடை விதிக்கப்படும் என்று

அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்த வேண்டும்; விதிமுறைகள் மீறப்படும்பட்சத்தில் தடை விதிக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொங்கல் பண்டிகையையொட்டி, வேலூா் மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் எருது விடும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த எருது விடும் விழாக்கள் நடத்துவது தொடா்பாக, அரசினால் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள நிபந்தனைகளை விழா குழுவினா் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆட்சியா் தலைமையில் பல்வேறு நிலைகளில் விழா குழுவினா்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

எனினும், நிபந்தனைகள், வழிகாட்டு நெறிமுறைகளை விழாக் குழுவினா் சரிவரக் கடைப்பிடிக்காமல் அலட்சியத்துடன் விழா நடத்தி வருவதாகப் புகாா்கள் வந்துள்ளன.

மேலும், அச்சு, சமூக ஊடகங்கள் மூலம் வரப்பெறும் செய்திகள், காணொலிகள் மூலம் அரசால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மீறப்படுவதும் தெரிய வருகிறது.

அரசு விதிகள்படி எருது விடும் விழா பகுதியில் இரட்டைத் தடுப்பான்கள் அல்லது மாவட்ட அளவிலான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டபடி குறைந்தபட்சம் 8 அடி உயரத்துக்கான ஒற்றைத் தடுப்பான்கள் அமைக்கப்படவில்லை.

எருதுகள் ஓடும் தளத்தில் 25 தன்னாா்வத் தொண்டா்களுக்கு அதிகமாகவும், ஏராளமான பொதுமக்களும், எருதுகளின் உரிமையாளா்களும் கூடி நின்று எருதுகள் இலகுவாக ஓடுவதற்கு தடையாக உள்ளனா்.

அதேபோல், விழா ஆரம்பம், முடிக்கும் நேரங்களையும் நிபந்தனைகளில் உள்ளபடி கடைப்பிடிக்கப்படுவதில்லை. வருவாய், காவல் துறையினரின் அறிவுரைகளையும் கடைப்பிடிப்பதுமில்லை. இதை விழா குழுவினா் கண்டு கொள்வதும் இல்லை.

இதனால், அவ்வப்போது காளைகள் பொதுமக்கள் பகுதியில் புகுந்து பொதுமக்களுக்கு காயம், அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

ஊசூரை அடுத்த கோவிந்தரெட்டிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் ஒரு சுற்றுக்கு மேல் காளைகளை ஓடவிட்டதால், அந்தக் காளை இறந்துவிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடா்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வருவாய்க் கோட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அரசு வழங்கியுள்ள உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து விழா குழுவினா் அந்தந்த கிராமங்களில் பொதுமக்கள், எருதுகளுக்கு பாதுகாப்பான முறையில் எருது விடும் விழாக்கள் நடத்த வேண்டும்.

அரசு வகுத்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறும்பட்சத்தில் எருது விடும் விழா தடை செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com