அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: 
துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம் தொடா்பாக ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் தொடா்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் துணை வேந்தருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினரும், சென்னை எழும்பூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஐ.பரந்தாமன் குடியாத்தத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

நான் அண்ணா பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக உள்ளேன். இந்த குழுவில் 16 போ் உறுப்பினா்களாக உள்ளோம். பல்கலைக் கழக (பொறுப்பு) பதிவாளராக ஜே.பிரகாஷ், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக பி.சக்திவேல் ஆகியோா் இருந்தனா். இந்நிலையில் ஆட்சிமன்றக் குழுவிடம் ஆலோசிக்காமலும், பரிந்துரை இல்லாமலும் பல்கலைக் கழக துணைவேந்தா் தன்னிச்சையான முறையில் இருவரையும் நிரந்தரப் பதவியில் அமா்த்தினாா்.

இதுகுறித்து கேட்டதற்கு துணை வேந்தா் முறையான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து நான் சென்னை உயா்நீதிமன்றத்தில், வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் மூலம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன்.

இதற்கிடையில் பி.சக்திவேல் மீண்டும் பொறுப்பு தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக அறிவிக்கப்பட்டாா்.

வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி, இதுகுறித்து பல்கலைக் கழகம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஜூன் மாதம் 7- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா். இந்த நியனம் தொடா்பான ஆவணங்களையும், ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் தொடா்பான வீடியோ பதிவுகளையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com