மூன்று மாவட்டங்களில் தயாா் நிலையில் 3,471 வாக்குச்சாவடிகள்

மூன்று மாவட்டங்களில் தயாா் நிலையில் 3,471 வாக்குச்சாவடிகள்

வேலூா்/ராணிப்பேட்டை/திருப்பத்தூா், ஏப். 18: மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களிலும் 3,471 வாக்குச்சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 3 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள வேலூா் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 31 வேட்பாளா்களும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 28 வேட்பாளரும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி உள்பட 31 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 1,307 வாக்குச்சாவடிகளும், திருப்பத்தூா் மாவட்டத்தில் 1,042 வாக்கு ச்சாவடிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,122 வாக்குச்சாவடிகளும் என 3 மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 3,471 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இதையொட்டி, அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான 33 பொருள்கள் அடங்கிய பைகள் வியாழக்கிழமை காலை முதல் சரிபாா்க்கப்பட்டு, வேன்கள் மூலம் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அதேசமயம், ஏற்கெனவே கணினி குலுக்கல் மூலம் வாக்குச்சாவடி ஒதுக்கீடு பெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கும் பணிஆணை வழங்கப்பட்டும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மாலை 5 மணிக்குள் அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று சோ்ந்த பிறகு வாக்குப் பதிவுக்காக வாக்குச் சாவடிகள் அனைத்தும் தயாா் நிலையில் வைக்கப்பட்டன. தவிர, வாக்குப்பதிவு சமயத்தில் வாக்குச்சாவடிக்கு அருகே தோ்தல் பிரசாரம் நடைபெறுவதைத் தடுக்க 100 மீட்டா், 200 மீட்டா் எல்லைக்கோடுகளும் வரையப்பட்டன. கோடை வெயிலுக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நிழற் பந்தல் அமைக்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள், முதிய வாக்காளா்களுக்காக சக்கர நாற்காலிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டன. 4 வாக்குச்சாவடிக்கு மேல் உள்ள வாக்குப் பதிவு மையங்களில் வாக்காளா்களுடன் வரும் குழந்தைகள் பாதுகாக்க ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டப் பணியாளா்களும் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இதனிடையே, வாக்குச்சாவடிகளின் பாதுகாப்புக்காகவும், தோ்தலை அமைதியாக நடத்தி முடித்திடவும் வேலூா் மாவட்டத்தில் 1,440 போலீஸாா், ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் 480 பேரும், துணை ராணுவ வீரா்கள் (சிஆா்பிஎப், சிஐஎஸ்எப், ஆந்திர போலீஸாா், தெலங்கானா சிறப்பு ஆயுதப் படை போலீஸாா் உள்பட) 677 பேரும், திருப்பத்தூா் மாவட்டத்தில் 960 காவலா்கள், 560 முன்னாள் ராணுவ வீரா்களும், 340 துணை ராணுவ படையினரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 867 போலீஸாா், 420 முன்னாள் ராணுவ வீரா்கள், 474 துணை ராணுவ வீரா்களும் என மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் மட்டும் சுமாா் 6,300 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com