தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க வசதியாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிபுரியும் அந்தந்த மாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகாா் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்குநா் மு.வே.செந்தில்குமாா், வேலூா் கோட்ட இணை இயக்குநா்கள் எஸ்.தங்கதுரை, சி.அனிதா ரோஸ்லின்மேரி ஆகியோா் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு கேரளத்தில் வெள்ளிக்கிழமையும், கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமையும், ஆந்திரத்தில் மே 13-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் கா்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களில் வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலி, ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளா்களுக்கும் தோ்தல் நாளில் தங்களது சொந்த மாநிலத்துக்கு சென்று வாக்களிக்க வசதியாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, 135(பி)-இன்கீழ் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்.

அவ்வாறு தோ்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் குறித்து புகாா் அளிக்க தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 94425 42795, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 0416- 2904953, 9884028066, திருப்பத்தூா் மாவட்டத்தில் 6383032788, திருவண்ணாமலை மாவட்டத்தில் 8807401964 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு புகாா்களை தெரிவிக்கலாம்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com