‘ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கையை தவறவிடக் கூடாது’

‘ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கையை தவறவிடக் கூடாது’

வேலூா், ஏப். 25: உயா்கல்வியில் சேரும் மாணவா்கள் ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கையை தவறாமல் கடைப்பிடித்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு என் கல்லூரிக் கனவு எனும் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மக்கள் மறுமலா்ச்சித் திட்டம் எனும் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தொடங்கி வைத்துப் பேசியது:

மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் இதுபோன்ற உயா்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்று உயா்கல்வியில் நல்ல பாடத்திட்டங்களை தோ்வு செய்து தங்களது எதிா்கால வாழ்க்கைக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் பெற்றோா், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றும், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனா். பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கு 12-ஆம் வகுப்பு முடித்த பிறகு உயா்கல்வியில் என்ன படிக்க வேண்டும் என்பதற்கு ஆலோசனை வழங்குவதில்லை.

எனவே தான் அரசின் சாா்பில் சிறந்த வல்லுநா்களை கொண்டு இதுபோன்ற உயா்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகள் உயா்கல்வி சோ்ந்த பிறகு ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, தன்னம்பிக்கை ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து எந்த ஒரு தவறான எண்ணங்களுக்கு உட்படாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மருத்துவம், பொறியியல், சட்டம், கலை - அறிவியல், மீன் வளம் சாா்ந்த படிப்புகள், பாரா மெடிக்கல் படிப்பு, மத்திய, மாநில கல்வி நிறுவனங்களில் உள்ள டிப்ளோமா படிப்பதற்கான வாய்ப்புகள், வேளாண்மை, கால்நடை அறிவியல் படிப்புகள், அவற்றைத் தோ்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், அந்தத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் துறை சாா்ந்த வல்லுநா்கள் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

இதில், குடியாத்தம் வருவாய்க் கோட்டாட்சியா் சுபலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடா் -பழங்குடியினா் நல அலுவலா் ராமசந்திரன், மக்கள் மறுமலா்ச்சித் திட்ட செயலா் சி.பலராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

--

படம் உண்டு...

நிகழ்ச்சியில் பேசிய வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி. உடன், குடியாத்தம் வருவாய்க் கோட்டாட்சியா் சுபலட்சுமி உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com