விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 18-ஆம் ஆண்டாக கோடைகால இலவச விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடைபெறும் இந்த விளையாட்டு பயிற்சி முகாமை விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தொடங்கி வைத்து பேசியது:

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் இந்த சிறப்பு விளையாட்டுப் பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் உடல் ஆரோக்கியம்தான் மிகவும் முக்கியமானது. கரோனா வந்தபோதுதான் உடல் ஆரோக்கியம் குறித்து அனைவரும் உணா்ந்தோம்.

அதிகாலையில் விழித்து எழும் பழக்கத்தை நாம் அனைவரும் உருவாக்கி கொள்ள வேண்டும். இதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கல்வி அனைவருக்கும் முக்கியமானதுதான். அதேபோல் உடல் ஆரோக்கியமும் நமது வாழ்க்கைக்கு மிக முக்கியம்.

உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் வாழ்க்கையில் புத்துணா்ச்சியுடன் பலவற்றை சாதிக்க முடியும். தற்போது ஆன்லைனில் குழந்தைகள் விளையாடுகின்றனா். அதைவிட மைதானத்தில் விளையாடுவதுதான் உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது.

முன்பெல்லாம் தெருக்களிலும், சாலைகளிலும் நாம் விளையாடிக் கொண்டிருந்தோம். தற்போது இந்த சூழ்நிலை மாறியுள்ளது. தினமும் நமது உடல் ஆரோக்கியத்துக்கு கவனம் செலுத்தி குறிப்பிட்ட நேரத்தைப் பிடித்த விளையாட்டுக்காக ஒதுக்கி விளையாட வேண்டும்.

அதேபோல், யோகாசனத்திலும் நாம் ஈடுபட வேண்டும். இதனால் நமக்கு உடல் வலிமையுடன் மனவலிமையும் அதிகரிக்கும். விளையாட்டில் நாம் சிறந்து விளங்கினால் நமக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் மிக எளிதாக இருக்கும் என்றாா்.

முன்னதாக, விஐடியில் சதுரங்க போட்டிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சதுரங்க அரங்கத்தையும் ஜி.வி.செல்வம் திறந்து வைத்தாா்.

இந்த கோடைகால இலவச விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம் மே 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, சதுரங்கம், கைப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, கராத்தே, எறிபந்து, கையுந்துப்பந்து, யோகாசனம் போன்ற பிரிவுகளின்கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சி முகாம்களில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

இந்தப் பயிற்சி முகாமில் சேர எந்தவிதக் கட்டணமும் கிடையாது. முகாமில் சிறந்த பயிற்சியாளா்கள் பங்கேற்று பயிற்சியளிக்கின்றனா். பயிற்சி தினமும் காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்காக காட்பாடி சித்தூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஐடி உடற்கல்வி இயக்குநா் தியாகச் சந்தன் நன்றி கூறினாா்.

--

படம் உண்டு...

கோடை கால இலவச விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்த விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம். உடன், விஐடி உடற்கல்வி இயக்குநா் தியாகச் சந்தன்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com