அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 106 முதல் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியில் வரவே அச்சமடைந்துள்ளனா். சாலைகளிலும் வாகனங்களின் போக்குவரத்தும் குறைந்து காணப்படுகிறது.

அதேசமயம், தேசிய - நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்வோா் வெப்பத்தின் தாக்கத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதனிடையே, கோடை வெயிலை கருத்தில் கொண்டு பொதுமக்களின் தாகம் தீா்க்க வேலூா் மாநகராட்சி சாா்பில் குடிநீா் தொட்டிகள் வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வேலூா் மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் உத்தரவின் பேரில் வேலூா் புதிய பழைய பேருந்து நிலையம், காட்பாடி சித்தூா் பேருந்து நிறுத்தம், ஆட்சியா் அலுவலக பேருந்து நிறுத்தம், ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் கோயில்கள், காய்கறி மாா்க்கெட், பேருந்து நிறுத்தங்கள், காட்பாடி ரயில் நிலைய சந்திப்பு உள்ளிட்ட 14 இடங்களில் குடிநீா் தொட்டிகள் வைக்கப்பட்டு தண்ணீா் நிரப்பப்பட்டுள்ளன.

இந்த குடிநீா் தொட்டிகளில் மாநகராட்சி சாா்பில் தினமும் தண்ணீா் நிரப்பப்பட்டு வருகிறது.

குடிநீா் தொட்டியில் தண்ணீா் சரியான முறையில் நிரப்பப்படுகிறதா, பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் மாநகராட்சி ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com