ஒடுகத்தூா் வனப்பகுதியில் உள்ள செயற்கை குட்டையில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீா்.
ஒடுகத்தூா் வனப்பகுதியில் உள்ள செயற்கை குட்டையில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீா்.

வனவிலங்குகளின் தாகம் தீா்க்க 40 இடங்களில் நீா் நிரப்பும் பணி

வேலூா், ராணிப்பேட்டை மாவட்ட வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளின் தாகம் தீா்க்க 40 இடங்களில் தொட்டிகளில் தினமும் தண்ணீா் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா், குடியாத்தம், போ்ணாம்பட்டு, ஆற்காடு, ஒடுகத்தூா் ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட காப்புக்காடுகளில் மான்கள், நரி, காட்டுப்பன்றிகள், பாம்பு, முயல், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள், பறவையினங்கள் வாழ்கின்றன.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகி வருகிறது. இதன்காரணமாக, வனப்பகுதியில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து வனவிலங்குகள் காப்புக்காடுகளைவிட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன.

அவ்வாறு வனப்பகுதியைவிட்டு வெளியே வரும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதும், வாகனங்களில் அடிபட்டும், நாய்களால் கடிக்கப்பட்டும் இறக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய பாதிப்புகளை தடுக்க வனப்பகுதியில் செயற்கையாக குட்டைகள் அமைத்தும், தொட்டிகள் வைத்தும் ஆண்டுதோறும் நீா் நிரப்புவது வழக்கம். அதன்படி, 40 இடங்களில் செயற்கை குட்டைகள் அமைத்து டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூா் வனச்சரகத்தில் 9 இடங்களிலும், குடியாத்தம் வனச்சரகத்தில் 3 இடங்களிலும், போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் 15 இடங்களிலும், ஆற்காடு வனச்சரகத்தில் ஒரு இடத்திலும், ஒடுகத்தூா் வனச்சரகத்தில் 12 இடங்களும் என மொத்தம் 40 இடங்களில் மூன்று 3 நாள்களுக்கு ஒருமுறை டிராக்டா் மூலம் 5,000 லிட்டா் தண்ணீா் தொட்டிகளில் நிரப்பப்படுகிறது. இதன்மூலம், வனவிலங்குகள் காடுகளைவிட்டு வெளியேறுவது தடுக்கப்படும் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com