ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

வேலூா் மாவட்ட அளவில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 29-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாணவ, மாணவிகளுக்காக தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த பயிற்சியாளா்கள் மூலம் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் கோடைகாலப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டுக்கான வேலூா் மாவட்டத்துக்கான கோடைகால பயிற்சி முகாம் வரும் 29-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. தினமும் காலை, மாலை அமா்வுகளில் தடகளம் , கைப்பந்து , வலைகோல் பந்து, டென்னிஸ், குத்துச் சண்டை, பளு தூக்குதல் ஆகிய 6 விளையாட்டுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த கோடைகால பயிற்சி முகாமில் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சிக் கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சோ்த்து ரூ. 200 செலுத்த வேண்டும். இந்த தொகை ஆன்லைனில் பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே வசூலிக்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு, இளைஞா் நல அலுவலரை 74017-03483 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com