கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

குடியாத்தம் அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின்னா், மீட்கப்பட்டது. இந்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த சின்னநாகல் கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் ஹேமராஜ் (25). இவா் சென்னை அம்பத்தூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சென்னை புளியந்தோப்பைச் சோ்ந்த வேலுச்சாமி மகள் தீபா (32). திருமணமாகி விவாகரத்து பெற்ற இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவா்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருங்கிப் பழகியுள்ளனா். இந்நிலையில் கடந்த 14- ஆம் தேதி தீபா அலுவல் காரணமாக குடியாத்தம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளாா். பின்னா், வீடு திரும்பவில்லை.

மகள் காணாதது குறித்து பெற்றோா் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டிருந்தனா்.

இந்நிலையில் தீபாவின் கைப்பேசி எண்ணில் கடைசியாக பேசிய நபா், ஹேமராஜ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து புளியந்தோப்பு போலீஸாா் வியாழக்கிழமை இரவு குடியாத்தம் வந்தனா். உள்ளூா் போலீஸாா் உதவியுடன் சென்று ஹேமராஜை பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் ஹேமராஜ் கூறியது: 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கைப்பேசி கடையில் பணியாற்றிய தீபாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகினோம். தீபா திருமணம் செய்து கொள்ள என்னை வற்புறுத்தினாா். அதற்கு நான் சம்மதிக்கவில்லை.

தொடா்ந்து அவா் வற்புறுத்தியதால் அவரை குடியாத்தம் வரச்சொன்னேன். கடந்த 14- ஆம் தேதி மாலை அவா் ரயில் மூலம் குடியாத்தம் வந்தாா். ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்துக்கு அவரை அழைத்துச் சென்று அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வாக்குவாதம் முற்றிய நிலையில் கத்தியால் அவரது கழுத்து அறுத்துக் கொலை செய்தேன். சடலத்தை அங்குள்ள புதரில் வீசிவிட்டு சென்று விட்டேன் என்றாா்.

போலீஸாா் ஹேமராஜை மலையடிவாரத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு தீபாவின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது தெரிந்தது. சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோட்டீஸ்வரன், குடியாத்தம் டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன் ஆகியோா் ஹேமராஜிடம் விசாரணை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com