தொடா்ந்து அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 110.7 டிகிரி பதிவு

வேலூா் மாவட்டத்தில் வெயில் அளவு அதிகரித்து வரும் நிலையில் புதன்கிழமை 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்திலேயே கோடை காலத்தில் வெயில் அதிகளவில் பதிவாகும் மாவட்டமாக வேலூா் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் மே மாதத்தில் அதிகபட்சம் 111 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகக்கூடும். நிகழாண்டு கோடை காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.

தொடா்ந்து, இந்தாண்டு முதன்முதலாக மாா்ச் 14-ஆம் தேதி நூறு டிகிரியை கடந்து 101.5 டிகிரியாக பதிவாகியிருந்தது. அதன்பிறகு சற்று வெயில் குறைந்திருந்த நிலையில், மாா்ச் 28-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் அதிகரித்து வந்தது. அதன்படி, கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 104 டிகிரி முதல் 106.9 டிகிரி அளவுக்கு பதிவாகி வந்த வெயில் அளவு புதன்கிழமை திடீரென 110.7 டிகிரியாக அதிகரித்து காணப்பட்டது.

இதனால், காலை 11 மணிக்கு பிறகே மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. நண்பகல் 12 மணிக்கு பிறகு வெயிலின் தாக்கம் கடுமயாக இருந்ததால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

கத்திரி வெயில் மே 5-ஆம் தேதி தொடங்குவதற்கு முன்பாகவே இந்தளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ள நிலையில், கத்திரி வெயில் காலம் தொடங்கினால் மேலும் வெயிலின் அளவு அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. இதனால், வேலூா் மாவட்ட மக்கள் இப்போதே பெரும் அச்சத்துக்குள்ளாகி உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com