விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

போ்ணாம்பட்டு அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். விபத்துக்கு காரணமானவரை கைது செய்யக் கோரி, உறவினா்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (37). கட்டடத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை மதியம் இரு சக்கர வாகனத்தில் போ்ணாம்பட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது பல்லலகுப்பத்தைச் சோ்ந்த திலீப்குமாா் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளாா். கொத்தமாரிகுப்பம் அருகே உள்ள தனியாா் வேளாண்மைக் கல்லூரி அருகே இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் கீழே விழுந்த சிவகுமாா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லேசான காயமடைந்த திலீப்குமாா் தப்பியோடி விட்டாா்.திலீப்குமாரை கைது செய்யக்கோரி சிவகுமாரின் உறவினா்கள் அவரது சடலத்துடன் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சென்ற டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன், வட்டாட்சியா் விநாயகமூா்த்தி ஆகியோா் அவா்களிடம் பேச்சு நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னா் சிவகுமாரின் சடலத்தை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com