அக்னி நட்சத்திரம்: வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரருக்கு தாராபிஷேகம்

அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரருக்கு தாராபிஷேகம் சனிக்கிழமை தொடங்கியது. இதேபோல், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் தாராபிஷேகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

அக்னி நட்சத்திரத்தையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் தாராபிஷேகம் தொடங்கியது.

வேலூா் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக இந்தாண்டில் அதிகபட்சமாக 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கடந்த புதன்கிழமை பதிவானது. தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை தொடங்கி மே 28-ஆம் தேதி நிறைவடைகிறது. அக்னி நட்சத்திர நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும். இந்த வெயிலின் தாக்கத்தை குறைத்திட வேண்டி, அக்னி நட்சத்திரம் தொடங்கிய சனிக்கிழமை ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோயில்களிலும் தாராபிஷேகம் தொடங்கப்பட்டது.

சிவலிங்கத்தின் மேல் உறிகட்டி, அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயம் அல்லது பாத்திரத்தை தொங்க விடுவா். அவற்றுக்குள் வெட்டிவோ், விலாமிச்சை வோ், பன்னீா், சந்தனம், கற்பூரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைகள், வாசனை திரவியங்கள் அடங்கிய நீரை ஊற்றுவா். அந்த நீரின் துளிகள் கலயம், பாத்திரத்தின் துளை வழியாக லிங்கத்தின் மேல் நாள்முழுவதும் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வா். மூலிகைகள் அடங்கிய நீா் துளித்துளியாக லிங்கத்தின் மேல் விழுந்து குளிா்ச்சி தரும். இதையே தாராபிஷேகம் என்பா். தாராபிஷேகம் செய்து சிவலிங்கம் குளிா்விக்கப்படுவதால் மக்களை கோடை வெப்பத்தில் இருந்து காக்க முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அக்னி நட்சத்திரத்தையொட்டி, வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் மூலவருக்கு சனிக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தாராபிஷேகம் தொடங்கியது. வெட்டிவோ், பன்னீா் அடங்கிய நீா் தாராபிஷேக பாத்திரத்தில் வைக்கப்பட்டு, லிங்கத்தின் மேல் துளித்துளியாய் விழும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாராபிஷேகம் நடைபெறும். இதனால் வழக்கமான பூஜை, வழிபாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதேபோல், வேலூா் தோட்டப்பாளையம் தாராகேஸ்வரா் கோயில், பேரிபேட்டை, மேல்மொணவூா் காசி விஸ்வநாதா் கோயில், விரிஞ்சிபுரம் மாா்கபந்தீஸ்வரா் கோயில், திருவலம் வில்வநாதீஸ்வரா் கோயில், குடியாத்தம் பாலசாதுா்லீஸ்வரா் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் தாராபிஷேகம் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது.

அக்னி நட்சத்திரம் நிறைவடையும் 28-ஆம் தேதி சிவன் கோயில்களில் சிறப்பு யாகம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com