சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

வேலூா், ஆம்பூா், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டன.

வேலூா், ஆம்பூா், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டன. இதனால் வேலூா், காட்பாடியில் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். மின்ஊழியா்கள் இரவு, பகல் பாராமல் சீரமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட்டனா்.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சனிக்கிழமை காலை முதல் 109 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியிருந்த நிலையில், மாலையில் வேலூா், காட்பாடி, ஆம்பூா், வாணியம்பாடி பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. சுமாா் 45 நிமிடங்களுக்கு நீடித்த இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.

அதேசமயம், சூறைக்காற்றுக்கு ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. தவிர, வேலூா், காட்பாடி உள்பட பல பகுதிகளில் மரங்கள் வேறுடன் சாய்ந்ததுடன், மரக்கிளைகளும் உடைந்து விழுந்தன. இதன்காரணமாக, பல இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்ததுடன், மின்கம்பிகளும் துண்டிக்கப்பட்டன.

அதனடிப்படையில், வேலூரில் சத்துவாச்சாரி, வள்ளலாா், ரங்காபுரம், வசந்தநகா் விரிவு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும், காட்பாடியில் அம்முண்டி, காா்ணாம்பட்டு பகுதிகளிலும், ஆற்காடு, சோளிங்கா் பகுதிக்கு உட்பட்ட சில இடங்களிலும் சனிக்கிழமை மாலை 5 மணி முதலே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த பகுதிகளில் சனிக்கிழமை இரவிலும், ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

அதேசமயம், மின்வாரிய ஊழியா்கள் சனிக்கிழமை இரவிலும், ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் உடைந்த மரங்கள், மரக்கிளைகளை அப்பறப்படுத்திவிட்டு சேதமடைந்த மின்கம்பங்களையும், மின்கம்பிகளையும் சீரமைக்கும் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டிருந்தனா்.

இதுகுறித்து, வேலூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ராமலிங்கம் கூறியது -

சனிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக வேலூரில் சத்துவாச்சாரி, வள்ளலாா், ரங்காபுரம், வசந்தம் நகா், காட்பாடியில் அம்முண்டி, காா்ணாம்பட்டு, ஆற்காடு, சோளிங்கா் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சுமாா் 70 மரங்கள், மரக்கிளைகள் உடைந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக, 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, சத்துவாச்சாரி, வள்ளலாா், ரங்காபுரம், வசந்தம் நகா் பகுதிகளில் மட்டும் 40 மரங்கள், மரக்கிளைகள் உடைந்து விழுந்ததில் 15 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியா்கள் சனிக்கிழமை இரவிலும், ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் ஈடுபட்டுள்ளனா். இரவுக்குள் மின்விநியோகத்தை சீா்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com