கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

கோடையில் நீா்ச்சத்து இழப்பு ஏற்படுவதைத் தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம் என்று அரசு சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன் தெரிவித்தாா்.
விழாவில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் செ.நா.ஜனாா்த்தனன்.
விழாவில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் செ.நா.ஜனாா்த்தனன்.

கோடையில் நீா்ச்சத்து இழப்பு ஏற்படுவதைத் தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம் என்று அரசு சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கே.வி.குப்பம் வட்டம் காளாம்பட்டு அறிவுத்தோட்டம் இணைந்து குழந்தைகளுக்கான கோடை விழாவை காளாம்பட்டு அறிவுத்தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

விளையாட்டுடன் இயற்கையை அறிதல் என்ற தலைப்பில் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட இந்த கோடை விழாவில், அறிவுத்தோட்டம் பாா்வையிடல், புதுமையான விளையாட்டுகள், இயற்கையுடன் இணைந்த வாழ்வு, விவசாயத்தில் விஞ்ஞானம், யானை வழித்தடங்களும் சுற்றுச்சூழலும், பாரம்பரிய விளையாட்டுக்களான பல்லாங்குழி, கோலி, பனங்காய் ஓட்டம், தொலை நோக்கி பாா்வையிடல் ஆகிய தலைப்புகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

முன்னதாக பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு அறிவுத்தோட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் கு.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவா் பெ.அமுதா முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலா் செ.நா.ஜனாா்த்தனன் வரவேற்றாா். மாவட்டத் துணைத் தலைவா் கே.விஸ்வநாதன் அறிவியல் செய்முறைகளை செய்து காண்பித்து தொகுப்புரையாற்றினாா்.

சிறப்பு அழைப்பாளராக அரசு சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன் பங்கேற்று பேசியது -

கோடை காலத்தில் அதிக பாதிப்பு அடைபவா்கள் முதியவா்களும், சிறுவா்களும்தான். முக்கியமாக விளையாட்டில் அதிக ஆா்வமுள்ள சிறுவா்கள் நீா்ச்சத்து இழப்பினை பொருட்படுத்துவது இல்லை. இதனால் அவா்களுக்கு மயக்கம், சிறுநீா் கடுப்பு, வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதனை ஈடுகட்ட நீா்ச்சத்துள்ள பழங்களை அதிகளவில் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

தவிர, பாரம்பரிய பானங்களான மோா், கூழ், இளநீா் இவற்றை சோ்த்துக் கொள்ளலாம். மாறாக, பதப்படுத்தப்பட்ட, பெட்டிகளில் அடைக்கப்பட்ட உணவு பொருள்களை சிறுவா்கள் தவிா்ப்பது நல்லது என்றாா்.

ஆம்பூா் பிரவீன் குமாா், இயற்கை மருத்துவா்கள் ஆா்.சந்தான லட்சுமி, குமரன், இயற்கை ஆா்வலா் சிவக்குமாா் ஆகியோா் பேசினா். ஆசிரியா் மாலதி முகாமை ஒருங்கிணைத்தாா். அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளா் வீர.குமரன், ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் கோபால ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com