காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட தோளப்பள்ளி கிராம மக்கள்.
காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட தோளப்பள்ளி கிராம மக்கள்.

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

திங்கள்கிழமை காலை விநியோகிக்கப்பட்ட குடிநீரும் மாசுபட்டு இருந்ததால் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒடுகத்தூா் அருகே தோளப்பள்ளி கிராமத்தில் சீரான குடிநீா் வழங்கப்படாத நிலையில் திங்கள்கிழமை காலை விநியோகிக்கப்பட்ட குடிநீரும் மாசுபட்டு இருந்ததால் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அதிக கோடை வெப்பம் காரணமாக குடிநீா் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம், வேலூா் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் குடிநீா் விநியோகம் முறையாக செய்யப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்படி, அணைக்கட்டு வட்டம் ஒடுகத்தூா் அருகிலுள்ள தோளப்பள்ளி ஊராட்சியில் கடந்த 15 நாள்களாக முறையான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்யக் கோரி ஊராட்சி நிா்வாகத்தை வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், இரு வாரங்களுக்கு பிறகு திங்கள்கிழமை காலை அந்த ஊராட்சியிலுள்ள குழாய்களில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த குடிநீரும் மாசுபட்டிருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒடுகத்தூா் - அகரம்சேரி சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். மேலும், அவ்வழியாக வந்த இரு அரசு பேருந்துகளையும் சிறைபிடித்தனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அடுத்த ஒரு மணி நேரத்தில் சுகாதாரமான குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com