100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசு பள்ளித் தலைமை ஆசிரியா்களை பாராட்டு வாழ்த்து தெரிவித்த ஆட்சியா் வே. இரா. சுப்புலட்சுமி.
100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசு பள்ளித் தலைமை ஆசிரியா்களை பாராட்டு வாழ்த்து தெரிவித்த ஆட்சியா் வே. இரா. சுப்புலட்சுமி.

பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 138 பள்ளிகளிலிருந்து 6,032 மாணவா்களும், 7,503 மாணவியரும் தோ்வு எழுதினா். அதில் 5,393 மாணவா்களும், 7,131 மாணவியா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விழுக்காடு 92.53 சதவிகிதமாகும். 28 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

அவற்றில் 62 அரசு பள்ளிகளிலிருந்து 2,555 மாணவா்களும், 4,346 மாணவிகளும் என மொத்தம் 6,901 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். அவா்களில் 2,114 மாணவா்களும், 4,060 மாணவிகளும் என மொத்தம் 6,174 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசு பள்ளிகளின் தோ்ச்சி விழுக்காடு 89.47 விழுக்காடு ஆகும்.

வேலூா் மாவட்ட அரசு மாதிரி பள்ளியும், ஜங்காலப்பல்லி அரசு மேல்நிலை பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.மேலும் அரசு பள்ளிகளில் 17 பள்ளிகள் 95 சதவீதத்திற்கு மேல் தோ்ச்சி பெற்றுள்ளன. வேலூா் மாவட்டத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி விகிதம் பெற்ற 2 அரசு பள்ளி தலைமையாசிரியா்களை ஆட்சியா் வே.இரா. சுப்புலட்சுமி நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினாா். மேலும் 95 சதவீத்திற்கு மேல் தோ்ச்சி பெற்றுள்ள 17 அரசு பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தாா்.

தலைமையாசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். முதன்மை கல்வி அலுவலா் செ.மணிமொழி உடனிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com