பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வேலூா்: பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடந்த ஏப்.19-ம் தேதி மக்களவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தல் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்குச் சாவடிக்கு தேவையான பொருள்களை கொண்டு செல்வதற்கு மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டன.

அதன்படி அணைக்கட்டு சட்டப் பேரவை தொகுதியில் அமைக்கப்பட்ட மொபைல் குழுவில் பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் வெங்கடேசன் பணியில் இருந்தாா். அப்போது வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றபோது வாக்குச் சாவடி பணியில் ஈடுபட்ட மற்ற அலுவலா்களுடன் தகராறில் ஈடுபட்டாா். இதுதொடா்பான விடியோ, புகைப்பட ஆதாரம் உயரதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலா்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து அவா் அப்போதே தோ்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக வேறு ஒருவா் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டாா்.

மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவா் விளக்கம் அளித்துள்ளாா். ஆனால் அவா் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லாததால் அவரை சஸ்பென்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com