யானை இனத்தைப் பாதுகாக்கும் விதமாக கிடப்பில் போடப்பட்டுள்ள "கஜா' அறிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
19-ஆம் நூற்றாண்டில் இமய மலை பகுதியைத் தவிர நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் யானைகள் வாழ்ந்து வந்தன. மனிதர்களின் அதிவேக ஆக்கிரமிப்பால் இன்று யானைகளின் வாழ்விடம் வெகுவாக சுருங்கி வருகிறது.
யானைகளின் எண்ணிக்கை குறைவதை உணர்ந்த மத்திய அரசு 1992-ஆம் ஆண்டு யானைகள் பாதுகாப்புத் திட்டத்தை துவங்கியதுடன் இதுவரை 32 யானைகள் காப்பகங்களையும் அறிவித்துள்ளது. இருந்தபோதும், புலிகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு கிடைத்த ஊக்கம், யானைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு கிடைக்கவில்லை.
கஜா அறிக்கை:
யானைகள் பாதுகாப்புத் திட்டம் முழுத் திறனுடன் செயல்படவும், யானைகளுக்கு உள்ள அச்சுறுத்தலைக் குறைக்கவும் மகேஷ் ரங்கராஜன் தலைமையிலான வல்லுநர் குழு மத்திய அரசால் நியமிக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு இக்குழு "கஜா' என்ற 187 பக்க அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதில், யானைகளைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்போல், யானைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்க வேண்டும் என்பதும், ஆணையத்தில் ஆளுமைக் குழு உருவாக்கப்பட்டு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதும் இக்குழுவின் முக்கியப் பரிந்துரையாகும்.
இக்குழுவில் மத்திய வனத் துறை அமைச்சர் தலைமையில் யானை விஞ்ஞானிகள், அரசு சாரா தொண்டு அமைப்பினர், காட்டுயிர் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இடம் பெறவேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆணையம், யானைகள் காப்பகங்களில் தணிக்கை செய்தல், காப்பகங்களில் ஆராய்ச்சிக் கூடம் அமைத்தல், காடு திருத்துதல், மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் என தேசிய பணிகளையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யானை பாதுகாப்பில் சிக்கல்:
யானைகளைப் பாதுகாப்பதில் தற்போது உள்ள மிகப் பெரிய சிக்கல் யானை-மனித எதிர்கொள்ளல் ஆகும். இதனால், ஆண்டுதோறும் 200 யானைகளும், 400 மனிதர்களும் பலியாகின்றனர். 1987 முதல் 2007-ஆம் ஆண்டு வரை ரயில் விபத்தில் 150 யானைகள் இறந்துள்ளன. அதில் 36 சதவீத விபத்துகள் அஸ்ஸாமிலும், 26 சதவீத விபத்துகள் மேற்கு வங்கத்திலும், 6 சதவீதம் விபத்துகள் தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளன.
வேட்டை:
1996 முதல் 1998-ஆம் ஆண்டு வரை 253 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. பன்னாட்டுத் தேவைகளைப் பொருத்து வேட்டையின் வீரியம் இருந்து வருகிறது. 2008 முதல் 2011-ஆம் ஆண்டு வரை 121 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது 12 மாநிலங்களில் 26 ஆயிரம் யானைகளுக்கு குறைவாகவே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யானைகள் அழிவுக்கு முக்கியக் காரணம் வாழ்விடம் சுருங்குதல், வாழ்விடம் துண்டுபடுதல், விவசாயத்துக்காக காடுகள் திருத்துதல் போன்றவை ஆகும்.
யானை வழித் தடங்கள் 25 சதவீதம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ளன. மீதமுள்ள 75 சதவீத வழித் தடங்கள் பாதுகாப்பற்ற முறையில் வனப் பகுதிகளுக்கு வெளியே உள்ளன. ஆனால், இந்த வழித் தடங்களும் ஒரு காலத்தில் வனப் பகுதியாக இருந்து தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
யானைகளைப் பாதுகாக்க விஞ்ஞானப் பூர்வ தீர்வுகளை உருவாக்க வலியுறுத்தும் "கஜா' அறிக்கை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் செயல் வடிவம் கொடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து யானைகள் ஆராய்ச்சியாளர் லட்சுமிநாராயணன் கூறுகையில், "யானைகளைப் பாதுகாக்க காடுகள் அழிவதைத் தடுப்பதும், வழித் தடங்களை மீட்பதும் முக்கியமானதாகும். யானைகள் வழித் தடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதால் யானைகள் பாதுகாக்கப்படுவதுடன், மனித உயிரிழப்பும் குறையும். ஆகவே ஒட்டுமொத்த பிரச்னைக்குத் தீர்வுகாண "கஜா' அறிக்கையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்' என்றார்.
காட்டுயிர் ஆராய்ச்சியாளர் மோகன்ராஜ் கூறுகையில், "கஜா' அறிக்கைக்கு உயிர் கொடுத்தால் மனித-யானை எதிர்கொள்ளல் குறைவதுடன் யானைகளையும், மனிதர்களையும் பாதுகாக்க வாய்ப்புள்ளது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

