அதிமுகவின் ரூ.10 ஆயிரம் வாக்குறுதி அவசியமானது: கே.அண்ணாமலை
அதிமுகவின் ரூ.10 ஆயிரம் வாக்குறுதி அவசியமானது என்று பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
கோவை காளப்பட்டி நேரு நகரில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க கூட்டணிக் கட்சிகளிடையே இணக்கத்தை ஏற்படுத்தவும், திமுக அரசின் குறைகளை மக்களிடம் கொண்டுச் செல்லவும் பிரசாரக் கூட்டத்தை பயன்படுத்துகிறோம். தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து வரும் 26, 27 தேதிகளில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வருகை தரும்போது முறைப்படி பேசி முடிவு எடுக்கப்படும்.
அரசியல் இலக்கணமாகத் திகழ்ந்த மூத்த அரசியல்வாதி ஆா்.நல்லகண்ணு மறைவு பொது வாழ்வுக்கு ஒரு பேரிழப்பு. ஒருமுறை கோவை மக்களவைத் தொகுதியில் நல்லகண்ணு போட்டியிட்டபோது, அவரை எதிா்த்து வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், நல்லகண்ணுவை எதிா்த்து வென்றதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்று வருத்தப்பட்டாா். அந்த அளவுக்கு அனைவராலும் மதிக்கப்பட்டவா் அவா். மணல் கொள்ளைக்கு எதிராக அவா் நடத்திய போராட்டங்களும், எளிய வாழ்க்கையும் எங்களைப் போன்றவா்களுக்கு என்றும் உந்துசக்தியாக இருக்கும்.
திமுக கூட்டணியில் விரிசல் இல்லை என திருமாவளவன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. உண்மையில் தேமுதிக வருகையால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடங்கள் குறைக்கப்பட உள்ளன. திருமாவளவனின் கட்சிக்கு வழங்கப்பட்ட 6 இடங்களில் ஒன்றை குறைக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதனால், அவா் அதிருப்தியில் உள்ளாா்.
தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயா்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்குவோம் என்ற அதிமுக வாக்குறுதி அவசியமானது. தமிழகத்தின் கடன் சுமையைக் குறைக்க கனிமவளத் துறையின் வருவாயைப் பெருக்க வேண்டும். வெறும் ரூ.100 கோடி மட்டுமே இந்தத் துறையில் வருமானம் கிடைப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. முறையான வருவாய் ஈட்டினால் மட்டுமே கடன் சுமையை சரி செய்ய முடியும் என்றாா் அவா்.
பிரசாரக் கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி. அருண்குமாா், கே.ஆா். ஜெயராம் மற்றும் பாஜக மாவட்டத் தலைவா் ஜே.ரமேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

