கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றத்தையடுத்து, கிருஷ்ணகிரியில் காங்கிரஸார் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த குமாரசாமி, முதல்வராக புதன்கிழமை பொறுப்பேற்றார். துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரா பதவியேற்றார்.
இதைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் நகரத் தலைவர் ரகமத்துல்லா தலைமையில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஜேசு துரைராஜ், நாராயணமூர்த்தி, மாநில பொதுக் குழு உறுப்பினர் ஏகம்பவாணன் உள்ளிட்டோர் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.