தொழிலாளி கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறை: ஒசூர் நீதிமன்றம் தீர்ப்பு

ஒசூர் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இளைஞர்கள் மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூர்


ஒசூர் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இளைஞர்கள் மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட சம்மந்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமய்யா (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜோதியம்மாளுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஆஞ்சி (எ) ஆஞ்சப்பாவுக்கும் (25) தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக லட்சுமய்யா, ஆஞ்சப்பா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆஞ்சப்பா தனது நண்பர்களான ஹரீஷ் என்கிற வீரப்பா (24), சசிக்குமார் (23) ஆகியோருடன் சேர்ந்து லட்சுமய்யாவை இருதுக்கோட்டை கிராமத்தில் இருந்து சம்மந்தக்கோட்டை கிராமத்துக்குச் செல்லும் வழியில் வரவழைத்து தடியாலும், கல்லாலும் தாக்கிக் கொலை செய்தார்.
இதையடுத்து, லட்சுமய்யாவின் உடலை அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் வீசிச் சென்றுவிட்டனர். இந்தக் கொலை சம்பவம் கடந்த 2016 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அப்போதைய காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆஞ்சப்பா, ஹரீஷ், சசிக்குமார் ஆகியோரை கைது செய்தார்.
இந்தக் கொலை வழக்கு ஒசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அசோகன் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஆஞ்சப்பா, ஹரீஷ், சசிக்குமார் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக கே. வேலாயுதம் ஆஜராகி வாதாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com