தாட்கோ மூலம் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் தொழில் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தாட்கோ மூலம் தொழில் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் இந்து ஆதி திராவிடர்களுக்கு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிலம் மேம்படுத்துதல், துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம், தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 65 வரையாகும். இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் விரும்பும் தொழிலை செய்யவும், மருத்துவமனை அமைத்தல் திட்டத்தின் கீழ் மருத்துவமனை, மருத்து கடை, கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 45 வரையாகும்.
இதுபோல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவி திட்டம், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்ட பட்டதாரிகளுக்கு நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்களுக்கு வயதுவரம்பு  23 முதல் 45
வரையாகும். 
தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி-1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி திட்டம், சமூக நலத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தொழில் தையற் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 
இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் h‌t‌t‌p://​a‌p‌p‌l‌i​c​a‌t‌i‌o‌n.‌t​a‌h‌d​c‌o.​c‌o‌m  என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர்கள் தங்கள் முழு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். நிலம் வாங்கும் திட்டத்துக்கு மூல பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நிலபத்திரம் மற்றும் நிலம் விற்பனை செய்பவரின் சாதிச் சான்று ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைபடுவோர்களின் வசதிக்காக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.60 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com