கிருஷ்ணகிரி அணை மதகுகளை விரைந்து சீர்படுத்த வேண்டும்
By DIN | Published On : 14th April 2019 04:57 AM | Last Updated : 14th April 2019 04:57 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அணை மதகுகளை விரைந்து சீர்படுத்த வேண்டும் என தென்பெண்ணை ஆற்று நீர்ப்பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பாசன விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது. அந்த அமைப்பின் மாவட்ட ஆலோசகர் நசீர் அகமது தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், செயலர் ராஜா, மகளிர் அணி தலைவர் பெருமா, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ராககவுண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தென்பெண்ணை ஆற்று நீரை சுத்திகரித்து, தேசிய நெடுஞ்சாலையில் 20 அடி ஆழத்துக்கு குழாய்கள் பதித்து, மின்மோட்டார்கள் மூலம் மாலூருக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியை கர்நாடக அரசு தொடங்கி உள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றில், மழைக் காலங்களில் மட்டுமே நீர்வரத்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கையால், தென்பெண்ணை ஆற்று நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நீர் வரத்து குறைவாக உள்ள நிலையில், கிருஷ்ணகிரி அணையின் மதகுகளை விரைந்து சீர்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி அணையை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.