கட்டிகானப்பள்ளி துணை சுகாதார நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டப்படுமா?

கட்டிகானப்பள்ளியில் தற்காலிக கட்டடத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கட்டிகானப்பள்ளியில் தற்காலிக கட்டடத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கிருஷ்ணகிரியின் அருகே உள்ள கட்டிகானப்பள்ளியில் தற்காலிககட்டடத்தில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக துணை சுகாதார நிலையமாக செயல்பட்டு வரும் இந்தக் கட்டடத்தில் அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வந்தன. அவைகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு வந்த நிலையில், அந்த கட்டடத்தில் தற்போது துணை சுகாதார நிலையம் மட்டும் செயல்பட்டு வருகிறது.
கட்டிகானப்பள்ளி, தேவசமுத்திரம், அகசிப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட பெருமாள் நகர், மோட்டூர், கிட்டம்பட்டி, தேவசமுத்திரம் என 14 கிராமங்கள் இந்த சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. சுமார் 29 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட இந்த 14 கிராம மக்களுக்கு சுகாதார தேவைகளை தீர்க்கும் வகையில் இந்த துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி நகரின் அருகே தற்காலிக கட்டடத்தில் இயங்கி வரும் இந்த துணை சுகாதார நிலையம், அதிக போக்குவரத்து மிகுந்த சாலை ஓரத்தில் அமைந்துள்ளதால் தூசிகள் படிந்து
அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது. இதனால், இந்த துணை சுகாதார நிலையத்துக்கு நோயாளிகள், கர்ப்பிணிகள் வர அஞ்சுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் இடம் ஒதுக்கி, துணை சுகாதார நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநர் பிரியா ராஜிடம் கேட்ட போது, தற்காலிக கட்டடத்தில் இயங்கும் இந்த துணை சுகாதார நிலையத்துக்கு போதிய இட வசதி கிடைக்கவில்லை. 
மாவட்ட நிர்வாகமோ, அல்லது பொதுமக்களோ இடம் அளிக்க முன்வந்தால், அந்த இடத்தில் நிரந்தரக் கட்டடம் கட்ட சுகாதாரத் துறை தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.
எனவே, தற்காலிக கட்டடத்தில் சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் இந்த துணை சுகாதார நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டும் வகையில் நிலம் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com