ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள

கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரித்து விநாடிக்கு 1.50 லட்சம் கன அடியாக ஒகேனக்கல் காவிரியில் ஆற்றில் கரைபுரண்டோடுகிறது.
வெள்ளப் பெருக்கு காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி மற்றும் பாலங்கள் முழுவதும் மூழ்கின. 
மேலும் காவிரியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ள தருமபுரி மாவட்ட நிர்வாகம்,  ஆற்றின் கரையோரங்களில் வசித்து வருபவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளது.  இந்த நிலையில்,  மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்பட அரசு உயரதிகாரிகள் ஒகேனக்கல்லில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். 
கேரள வயநாடு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை, கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ள தென்மேற்குப் பருவமழையால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.  தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியிலிருந்து படிப்படியாக அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை 2 லட்சத்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.  ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. இதையடுத்து, ஒகேனக்கல் மற்றும் காவிரி கரையோர மக்கள் அனைவரும் ஒகேனக்கல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு,  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,  ஒகேனக்கல்-நாட்றாம்பாளையம் செல்லும் சாலையில் வாகனப் போக்குவரத்து மாற்றுப் பாதைகள்  அமைக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் கண்காணித்து வருகின்றனர்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
நாடார் கொட்டாய், நாகர்கோயில் மற்றும் பிரதான அருவி பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன்,  "காவிரி ஆற்றில் தற்போது விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  
கர்நாடக அணைகளிலிருந்து கூடுதலாகத் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு  நள்ளிரவில் வரும்  என எதிர்பார்க்கப்படுகிறது. 
காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது' என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com