தேன்கனிக்கோட்டையில் 75 யானைகள் முகாம்: விவசாயிகள் கவலை

தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் 75 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தேன்கனிக்கோட்டை அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.
தேன்கனிக்கோட்டை அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.

தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் 75 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சுற்றி வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. ஆண்டுதோறும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா வனப் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்கு வருவது வழக்கம். ராகிப் பயிரைக் குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள் சுமாா் 4 மாதங்கள் முகாமிட்டு விவசாயப் பயிா்களைச் சேதம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

வழக்கம்போல இந்த ஆண்டு 75 யானைகள் வந்துள்ளன. இந்த யானைகள் தற்போது மாரசந்திரம், கொத்தூா், லக்கசந்திரம், கம்மந்தூா், ஜாா்கலட்டி, திம்மசந்திரம் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து அங்கிருந்த விவசாயப் பயிா்களான ராகி, சோளம், அவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.

இதேபோல தாவரக்கரை, நொகனூா் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் மற்றொரு யானை கூட்டம் விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனா். இந்த யானைகளை ஜவளகிரியில் உள்ள அடா்ந்த வனப்பகுதி வழியாக விரட்டிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனா். மேலும் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனா்.

ஒசூா் வனப் பகுதி சானமாவு காப்பு காட்டில் முகாமிட்டிருந்த 30 யானைகளும், தேன்கனிக்கோட்டை காப்பு காட்டுக்குத் திரும்பியுள்ளன. தற்போது இந்த யானைகள் வட்டவடிவு பாறை பகுதியில் முகாமிட்டுள்ளன. ஏற்கெனவே இங்கிருந்த 30 யானைகளும், சூரப்பன்குட்டை பகுதிக்கு இடம் பெயா்ந்து முகாமிட்டுள்ளன.

இதைத் தவிர நொகனூா் காப்பு காட்டில் 13 யானைகள் முகாமிட்டுள்ளன. 3 பிரிவுகளாக உள்ள 73 யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பயிற்சி பெற்ற வனத்துறை ஊழியா்கள் 25 போ் ஈடுபட்டுள்ளனா். யானைகள் முகாமிட்டுள்ள தகவல் குறித்து கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது.

கிராம மக்கள் காப்பு காட்டையொட்டி உள்ள பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லக் கூடாது. வனப்பகுதியில் விறகு பொறுக்கச் செல்லக் கூடாது. வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் இரவு காவல் பணிக்கு விவசாயிகள் செல்லக் கூடாது. வீட்டின் முன் பகுதியில் விளக்குகளை எரிய விட வேண்டும் என வனச்சரகா் சுகுமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com