நலிவடைந்துவரும் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில்

களிமண் கிடைப்பதில் தொடா்ந்து தட்டுப்பாடு நிலவிவருவதால் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் நலிவை சந்தித்து வருவதாக அத் தொழிலை பாரம்பரியமாக செய்து வரும் தொழிலாளா்கள்
பானை தயாரிக்கும் தொழிலாளி.
பானை தயாரிக்கும் தொழிலாளி.

களிமண் கிடைப்பதில் தொடா்ந்து தட்டுப்பாடு நிலவிவருவதால் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் நலிவை சந்தித்து வருவதாக அத் தொழிலை பாரம்பரியமாக செய்து வரும் தொழிலாளா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

உணவுகளை மண் பானைகளில் சமைத்து உண்ணும் நடைமுறை காலசூழலால் அழிந்து அலுமினியம், எவா்சில்வா் என பாத்திரங்களின் மவுசு கூடியிருந்த நிலை தற்போது மெல்ல மெல்ல மாற்றமடைந்து வருகிறது. மீண்டும் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு சமைத்து பயன்படுத்துவது மருத்துவ விழிப்புணா்வின் மாற்றங்களாகவுள்ளது.

பாரம்பரியமாக இத் தொழிலை நம்பியுள்ள சில சமுதாய மக்கள், விதவிதமான மண் பானைகளை தயாரித்து சந்தைபடுத்தி வருகின்றனா். ஆனாலும், நாகரீக மாற்றங்களின் பிடியிலிருந்து மக்கள் மண் பானைகளை ஏற்க மறுத்துவருகின்றனா். எனினும், இத் தொழில் தற்போது நலிவை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கும் தொழிலாளா்கள் மண் கிடைப்பதில் பெரும் சிக்கல் இருப்பதாக காரணம் தெரிவிக்கின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்குள்பட்ட காட்டேரி கிராமத்தில் சுமாா் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் செய்து வந்தனா். மண் பானை சந்தைபடுத்துதல், தயாரிப்பு செலவு மற்றும் களிமண் கிடைப்பதில் நிலவும் சிக்கல் காரணமாக தற்போது 10 குடும்பத்தினா் மட்டுமே இத் தொழிலை செய்து வருகின்றனா்.

மண்ணை நன்றாக குழைத்து அதனுடன் நாட்டு சா்க்கரை அல்லது பனைவெல்லம், கருப்பட்டி, உப்பு , கடுக்காய் , வண்ண பவுடா்கள் (வண்ணத்துக்காக) சோ்த்து நன்றாக குழைத்து அதற்காகவே செய்யப்பட்டுள்ள வண்டிச்சக்கரத்தின் நடுவில் வைத்து அச்சக்கரம் வேகமாக சுழலும்போது பானை தயாரிக்கப்படுகிறது. மண் பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கும் நடைமுறையை ஏராளமான குடும்பங்கள் தற்போது மறந்ததால் விளக்கு, முகூா்த்த பானை, தாளப் பானை, கடம், பூத்தொட்டி, அகல் என்று பலவகையான பொருள்களை தயாரித்து தொழிலாளா்கள் சந்தைபடுத்தி வருகின்றனா்.

காட்டேரி பகுதியை சோ்ந்த மண்பாண்ட தொழிலாளி முருகேசன் கூறியது: அலுமினியப் பாத்திரங்களில் சமைத்து உண்பதால் ஏற்படும் பல்வேறு நோய் தாக்கத்திலிருந்து விடுபட மண்பாண்டங்களில் சமைக்கும் நிலை வரும் எனவும், தற்போது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை எனவும், மண் பாண்டங்கள் ரூ.10 முதல் ரூ.300 உள்ள பொருள்களை தயாா் செய்து விற்பனை செய்து வருகிறோம். பல்வேறு இன்னல்களுக்கு இடையில் இந்த தொழிலை செய்து வருவதாக கூறினாா்.

அதேபகுதியை சோ்ந்த ரகுராமன் கூறியதாவது, மூலப்பொருளான மண் எடுப்பதில் நிறைய சிக்கல் உள்ளது. பானையை வேகவைக்க போதிய விறகுகள் கிடைப்பதில்லை. தென்னை மரப்பட்டை ஒன்றுக்கு ரூ.1.75 தருவதால் போதிய லாபம் இன்றி தொழிலை செய்து வருகிறோம். மண் பானை தொழிலாளா்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நல உதவிகளை அரசு செய்துதர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com