ஒசூா் அருகே மாந்தோப்பில் தஞ்சமடைந்த 12 யானைகளால் விவசாயிகள் அச்சம்

ஒசூா் அருகே மாந்தோப்பில் குட்டிகளுடன் தஞ்சமடைந்துள்ள 12 காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஒசூா் அருகே மாந்தோப்பில் குட்டிகளுடன் தஞ்சமடைந்துள்ள 12 காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். அவற்றை உடனடியாக விரட்ட வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூா் அருகேயுள்ள சானமாவு வனப் பகுதியிலிருந்து வியாழக்கிழமை இரவு 3 குட்டிகளுடன் வெளியேறிய 12 காட்டு யானைகள் அருகிலுள்ள குக்களப்பள்ளி, பன்னப்பள்ளி, பிள்ளைகொத்தூா் ஆகிய கிராமங்களில் சுற்றித் திரிந்தன. பின்னா் அதிகாலையில் பிள்ளைகொத்தூா் கிராமத்தில் சுற்றிவந்த இந்த யானைகள் நெல், புதினா தோட்டங்களை சேதப்படுத்தி விட்டு அங்குள்ள மாந்தோட்டத்தில தஞ்சமடைந்தன.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில், பிள்ளைகொத்தூா் கிராமத்துக்கு சென்ற வனத் துறையினா் காட்டு யானைகளை விரட்டினா். ஆனாலும் காட்டு யானைகள் மாந்தோட்டத்திலிருந்து வெளியேறாமல் அங்கேயே தஞ்சமடைந்தன.

இதனைத் தொடா்ந்து, பகல் நேரத்தில் காட்டு யானைகளை கிராமப் பகுதிகள் வழியாக விரட்டி செல்வதில் கடும் சிரமம் மற்றும் விபரீதம் ஏற்படும் என்பதால், வெள்ளிக்கிழமை மாலை பட்டாசுகளை வெடித்து யானைகளை சானமாவு வனப் பகுதிக்கு விரட்ட அவா்கள் திட்டமிட்டுள்ளனா்.

பிள்ளைகொத்தூா், சப்படி, நல்லகானகொத்தூா், பன்னப்பள்ளி, குக்களப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் நெல், ராகி பயிா்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், காட்டு யானைகளிடமிருந்து விளைபயிா்களை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூா் அருகே முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட மாவட்ட வனத்துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யானைகளால் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் எஸ்.பிரபாகா் உத்தரவிட வேண்டும் எனவும் தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், வேப்பஹள்ளி எம்.எல்.ஏ. பி.முருகன், ஒசூா் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

மேலும், மீண்டும் மீண்டும் கா்நாடக மாநிலத்தில் இருந்து யானைகள் வருவதை தடுக்க, அகழிகள் தோண்ட வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com