எருது விடும் திருவிழா: கிருஷ்ணகிரியில் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் பொங்கல் திருநாளையொட்டி,  எருது விடும் திருவிழா நடத்துவது குறித்து, வருவாய்

கிருஷ்ணகிரியில் பொங்கல் திருநாளையொட்டி,  எருது விடும் திருவிழா நடத்துவது குறித்து, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதுகுறித்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி காவல் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் பங்கேற்ற பொதுமக்கள், தமிழர்களின் வீர விளையாட்டான எருது ஓட்டத்தை நடத்தும் புதிய கிராமங்களை அரசிதழில் இடம் பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கிராமங்களைச் சேர்க்க விண்ணப்பித்து 15 நாள்களில் ஆணை வழங்க வேண்டும். காலை 10 முதல் 4 மணி வரையில் எருது விடும் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும். 
விழாவில் பங்கேற்கும் எருதுகளுடன் அதன் உரிமையாளர் புகைப்படம் எடுத்து கால்நடை மருத்துவர்களிடம் சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் ஒரு வாரத்துக்கு மட்டுமே செல்லும் என்பதைத் தவிர்க்க வேண்டும். எருது விடும் விழா, ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. இத்தகைய நிலையில், எருதுகளுக்கான தகுதி சான்றிதழ் மருத்துவரிடம் ஒரு முறை வாங்கினால் போதுமானது என வலியுறுத்தி பேசினர்.
இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் பேசியது: எருது விடும் விழாவானது  2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும். கூடுதல் அவகாசம் வேண்டும் எனில் ஆட்சியரிடம் மனு அளித்து அனுமதி பெற வேண்டும். அரசிதழில்  வெளியான கிராமங்களில் மட்டுமே எருது விடும் விழா நடைபெறும். மற்ற கிராமங்களில் அனுமதிக்க இயலாது.  திருவிழாவின் போது பார்வையாளர்கள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லை என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து பரிந்துரை செய்யும் பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். 
 மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியில்லாமல்   சட்டத்துக்கு புறம்பாக நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நுழைவுக் கட்டணம், ரொக்கப் பரிசு வழங்கக் கூடாது என்றார்.
இக் கூட்டத்தில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com