நல்லூர், பாலிகானப்பள்ளி ஊராட்சி அலுவலகங்களில் ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 05th January 2019 07:37 AM | Last Updated : 05th January 2019 07:37 AM | அ+அ அ- |

ஒசூர் ஒன்றியத்துக்குள்பட்ட நல்லூர் மற்றும் பாலிகானப்பள்ளி ஊராட்சிகளில் திட்டப் பணிகள் மற்றும் கிராம ஊராட்சி கணக்குகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
முன்னதாக நல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நொச்சி, புங்கன், வேம்பு, பூவரசன், சில்வர், ஹோக் உள்ளிட்ட செடிகள் உற்பத்தி செய்யும் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது, நாற்றங்கால்கள் தரமானதாக உள்ளதா, நல்ல மரங்கன்றுகளை உருவாக்கும் வகையில் செடிகளை உற்பத்தி செய்து அந்தந்த ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு வழங்கி அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடவு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பாலிகானப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் பொது நிதி பயன்பாடு, திட்ட நிதி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டண வசூல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயன் பெறும் பணியாளர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், கிராமக் கணக்குகளை சரியான முறையில் கையாள வேண்டும் என ஊராட்சி செயலருக்கு அறிவுரை கூறினார். இதனைத் தொடர்ந்து குடிநீர்த் திட்ட பணிகள், தெருவிளக்கு பயன்பாடு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், விமல்ராஜ், துணை ஒன்றிய பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர்
உடனிருந்தனர்.