பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிருஷ்ணா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிருஷ்ணா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியல் கல்லூரி, கிருஷ்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு கல்வி குழுமத்தின் தலைவர் சி.பெருமாள் தலைமை வகித்தார். 
கலை, அறிவியல் கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள், கல்லூரியின் முதல்வர் ஹரிகிருஷ்ணராஜ், மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். 
அரூர் அரசுப் பள்ளியில்... அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.எம்.ராணி தலைமை வகித்தார். சமத்துவப் பொங்கல் கொண்டாடுவதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புகையில்லாத போகிப் பண்டிகை, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிர்த்தல் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழாவில் உதவி தலைமை ஆசிரியை எம்.செல்வநாயகி, சுகாதார ஆய்வாளர் ச.கார்த்திகேயன், நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலர் தி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆதிபராசக்தி கல்வியியல் கல்லூரியில்... அரூரை அடுத்த எருமியாம்பட்டி ஆதிபராசக்தி கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் தலைவர் கா.மாரியப்பன் தலைமை வகித்தார். விழாவில் உறி அடித்தல், ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல், கோலப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதேபோல், ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெ.ரத்தினவேல், நிர்வாக அலுவலர் எஸ்.ராபர்ட் ராஜா, மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரியில்... தருமபுரியை அடுத்த சின்னத்தாயம்மாள் தெருவில் குடியிருப்போர் சங்கம் சார்பில் சமத்துவப் பொருங்கல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி கோலப்போட்டி, பொங்கல் வைத்தல், ஆட்டத்துடன் பாடல், பாட்டுக்கு பாட்டு, உரியடித்தல், கயிறு இழத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. "கல்வி, குடும்பம், சமுதாயம், நாம்' என்ற தலைப்புகளில் பேராசிரியர் கு.சிவப்பிரகாசம், ஆசிரியர் எஸ்.கவிதா, அண்ணா குபேரன், நாகை பாலு ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கம், முனைவர் சேதுராமனின் "மாந்திரமா தந்திரமா' மாயஜால காட்சி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை நிர்வாகக் குழுவினர் ஒருங்கிணைத்தனர்.
ஊத்தங்கரையில்... ஊத்தங்கரையை அடுத்த ஜோதிநகர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய ஆடைகளை உடுத்திவந்து புதுப் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர். சிறப்பு விருந்தினர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் கோ. மாதேஸ்வரி, என்.ஏ.பி. நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி உதவி ஆசிரியர்கள் மு.லட்சுமி, த. லதா, ந. திலகா ஆகியோர்  செய்திருந்தனர். நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கு. ஆனந்தி,  ஆசிரியர் அ. பவித்ரா, சத்துணவு அமைப்பாளர் பீமன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com