மாணவியை கடத்தி பலாத்காரம்: இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 29th January 2019 04:51 AM | Last Updated : 29th January 2019 04:51 AM | அ+அ அ- |

பிளஸ் 2 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சிக்கபூவத்தியைச் சேர்ந்தவர் சக்திவேல் ( 24). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் பிளஸ் 2 பயின்று வந்த 17 வயது மாணவியை கடந்த 2.11.2016 -இல் அழைத்துப் பேசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும், பொன்மலை கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸார், சக்திவேலை கைது செய்தனர். அவர் மீது கடத்தல், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு கூறியது.
இதில் கடத்தல் பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதம், கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், போக்சோ பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மொத்தம் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் கலையரசி ஆஜரானார்.