குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 31st July 2019 08:53 AM | Last Updated : 31st July 2019 08:53 AM | அ+அ அ- |

சூளகிரி அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூளகிரி ஒன்றியம், மாரண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கட்டிகானப்பள்ளி கிராமத்தில் 200- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த இரு மாதங்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்காததைக் கண்டித்து கிராம மக்கள் 50 பேர் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபராஜ் சாமுவேல், விமல் ரவிக்குமார் மற்றும் சூளகிரி போலீஸார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், விரைவில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 1 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.