தொடர்திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது: 55 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
By DIN | Published On : 14th June 2019 10:35 AM | Last Updated : 14th June 2019 10:35 AM | அ+அ அ- |

மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர்திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் பணம், நகைகள் தொடர்ந்து திருட்டு போயின. இந்த தொடர் திருட்டுச் சம்பவத்தில் மக்கள் அச்சமடைந்து வந்த நிலையில், திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கிருஷ்ணகிரி எஸ்.பி. பண்டி கங்காதர் உத்தரவின் பேரில், ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மத்தூர் காவல் ஆய்வாளர் பால்பாண்டி தலைமையிலான தனிப்படை போலீஸார், மத்தூர் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமாக வந்த இளைஞர் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்ததால், போலீஸார் இளைஞரிடம் தீவிர விசாரணை
மேற்கொண்டனர்.
அதில், அவர் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியாண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (35) என்பதும், மத்தூர் சுற்றுவட்டாரங்களில் பூட்டிய வீடுகளை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. மேலும், அய்யப்பன் மீது ஊத்தங்கரை காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், மத்தூரில் 3 வழக்குகளும், கல்லாவியில் 2 வழக்குகளும், சாமல்பட்டியில் ஒரு வழக்கும் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, அய்யப்பனை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 55 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.