கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் ஏமாற்றம்

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவினரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இதுவரை கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 1962, 1967,1999,2004, 2009 ஆகிய தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, தளி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திமுக எளிதில் வெற்றிபெறும் என திமுகவினர் கருதினர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் கடும் போட்டி இருந்தது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. இ.ஜி.சுகவனம், வெற்றிச் செல்வன், அண்மையில் திமுகவில் சேர்ந்த தொழில் அதிபர் மதியழகன், முன்னாள் தலைமைப் பொறியாளர் ஜெயராமன் என 42 பேர் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட திமுக தலைமையிடம் விருப்ப மனு அளித்தனர். மேலும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியானது திமுகவுக்கு ஒதுக்கப்படும் என ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியானது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த திமுகவினர் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். 
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியானது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமராக ராகுல் காந்தியை அடையாளப்படுத்தியுள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவோம் என திமுகவினர் கூறுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com