தேர்தல் விதிமீறல்: நாம் தமிழர், திமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 24th March 2019 05:47 AM | Last Updated : 24th March 2019 05:47 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர், திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள், தட்டிகள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின் போது நடத்தை விதிமுறைகளை மீறி டிராக்டரில் அதிக எண்ணிக்கையில் கட்சி கொடிகள், சிறிய பதாகைகள் கட்டி வந்ததாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ந.மதுசூதனன்(37), மாற்று வேட்பாளர் ஜெ.சுரேஷ்(29), டிராக்டர் ஓட்டுநர் பி.துரைராஜ்(42) ஆகியோர் மீது பையனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இதேபோல் சாமல்பட்டி அருகே குண்ணத்தூர் - காரப்பட்டு இடையே பாம்பாறு பாலத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு விளம்பரம் செய்ததாக ஊத்தங்கரை அருகே உள்ள குண்ணத்தூரைச் சேர்ந்த திமுக உறுப்பினர் எஸ்.மாரியப்பன்(53) மீது உதவி காவல் ஆய்வாளர் வித்தூன்குமார் அளித்த புகாரின் பேரில், சாமல்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இதுவரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.