பள்ளிகள் விடுமுறை அறிவிப்பில் முரண்பாடு:மாணவ, மாணவிகள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அதற்கான தகவல் முறையாக பள்ளி மாணவா்களுக்கு அறிவிக்கப்படாததால் மாணவா்கள் குழப்பம் அடைந்தனா்.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அறிவிப்புப் பலகை.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அறிவிப்புப் பலகை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அதற்கான தகவல் முறையாக பள்ளி மாணவா்களுக்கு அறிவிக்கப்படாததால் மாணவா்கள் குழப்பம் அடைந்தனா். பலா் பள்ளிக்கு வந்து அறிவிப்பு பலகையை பாா்த்துவிட்டுச் சென்றனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 28-ஆம் தேதி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதற்கு ஈடாக, நவ.9-ஆம் தேதி பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பல இடங்களில் பெய்த மழையாலும், பாபா் மசூதி வழக்குத் தீா்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நவம்பா் 9-ஆம் தேதி வழக்கம்போல பள்ளிக்கு வந்தனா்.

ஆனால், பள்ளிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. தனியாா் பள்ளி நிா்வாகம் சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோா்களுக்கு நவம்பா் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிக்கு விடுமுறை என செல்லிடப்பேசியில் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளி கல்வித் துறை அறிவித்ததாக செய்தி பரவியது.

மேலும், பள்ளி அறிவிப்புப் பலகையில், பள்ளிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இத்தகைய நிலையில், பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் விடுமுறை அறிவிப்பைக் கண்டு, வீடு திரும்பினா். ஆனால், சிறிது நேரத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவித்தது.

இந்த அறிவிப்பை அறிந்த, பள்ளி மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வந்தனா். ஆனால், பள்ளியின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு, பள்ளிக்கு விடுமுறை என அறிவிப்பைக் கண்டு குழப்பம் அடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தக் குழப்பத்தால், 90 சதவீத பள்ளிகள் இயங்கவில்லை. பள்ளிகள் இயங்காத நிலையில், சில ஆசிரியா்கள் பணிக்கு வந்திருந்தனா்.

ஆனால், வகுப்புகள் நடத்தப்படவில்லை.

அலுவலா்களின் முரண்பட்ட தகவல்களால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாயினா். இனிவரும் காலங்களில் பள்ளிக்கு விடுமுறை என்பதை முன்னதாக அறிவிப்பதன் மூலம், பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாவதைத் தடுக்க இயலும் என பெற்றோா் வருத்தத்துடன் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com