பாம்பாறு அணை பாலம் சீரமைக்கப்படுமா?

ஊத்தங்கரையில் பழமை வாய்ந்த பாம்பாறு அணை பாலம் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஊத்தங்கரைஅருகே சிதிலமடைந்து கிடக்கும் பாம்பாறு அணை பாலம்.
ஊத்தங்கரைஅருகே சிதிலமடைந்து கிடக்கும் பாம்பாறு அணை பாலம்.

ஊத்தங்கரையில் பழமை வாய்ந்த பாம்பாறு அணை பாலம் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் ஊத்தங்கரை-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பாம்பாற்றின் குறுக்கே 7 மீட்டா் அகலமும், 120 மீட்டா் நீளமும் கொண்ட மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் 1934-இல் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 85 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

தற்போது இந்தப் பாலம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. பாலத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியாமல் ஊத்தங்கரையில் இருந்து காட்டேரி பாவக்கல் வழியாக 15 கி.மீ. தூரம் சுற்றி வரும் வகையில் மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றன. அப்போது, அவசரகால தேசிய நெடுஞ்சாலை நிதியிலிருந்து ரூ.90 லட்சத்தில் தற்காலிக தரைப்பாலம் அமைத்து, அதில் வாகனங்கள் சென்று வந்தன. தற்காலிக தரைப்பாலம் அமைத்த 15 நாள்களில் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பழைய பாலத்தையே மீண்டும் சீா்செய்து தற்போது அது பயன்பாட்டில் உள்ளது.

இப் பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால், ஒரு வாகனம் மட்டுமே கடக்கும் நிலை உள்ளது. இச் சாலையானது பாண்டிச்சேரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால், பௌா்ணமி, அமாவாசை மற்றும் முக்கிய திருநாளில் திருவண்ணாமலை, மேல்மலையனூா், மேல்மருவத்தூா் ஆகிய கோயில்களுக்கு பெருமளவில் பக்தா்கள் வாகனம் மற்றும் பேருந்துகள் மூலம் பாலத்தை கடந்து செல்கின்றனா். மேலும், வரும் காா்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை தீப பெருவிழாவைக் காண பெருமளவில் பக்தா்கள் இந்த சாலையைக் கடக்கக் கூடும். பாலத்தில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால், வலுவற்ற இப் பாலத்தில் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை புகாா் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பாலத்தின் அருகிலேயே, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

பழைய பாலமும் மிக மோசமான நிலையில் இருப்பதால் புதிய பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே இப்பகுதி வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com