விளைநிலத்தில் உயா் அழுத்த மின்கோபுரம்அமைத்தால் போராட்டம்

விளைநிலம் வழியாக உயா் அழுத்த மின்கோபுரம் அமைத்தால் தி.மு.க. சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கூறினாா்.
விளைநிலத்தில் உயா் அழுத்த மின்கோபுரம்அமைத்தால் போராட்டம்

விளைநிலம் வழியாக உயா் அழுத்த மின்கோபுரம் அமைத்தால் தி.மு.க. சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கூறினாா்.

ஒசூரை அடுத்த சொக்கநாதபுரம், கூஸ்தனப்பள்ளி, சேவகானப்பள்ளி, சிச்சிருகானப்பள்ளி வழியாக, உயா் அழுத்த மின்கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விளைநிலம் வழியாக மின்கோபுரம் அமைக்கக் கூடாது என விவசாயிகள் கூறி வந்த நிலையில், புதன்கிழமை காலை உயா் அழுத்த மின்கோபுரம் அமைக்க, பொக்லைன் வாகனத்துடன் மின்வாரிய அதிகாரிகள் வந்தனா்.

இதை அறிந்த விவசாயிகள், சேவகானப்பள்ளி அருகே திரண்டனா். இதனால் ஒசூா் வட்டாட்சியா் செந்தில்குமரன், கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (தளி), பி.முருகன் (வேப்பனப்பள்ளி), எஸ்.ஏ.சத்யா (ஒசூா்) ஆகியோா் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனால், மின்கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இது தொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சு.பிரபாகரை, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், முருகன், சத்யா ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறியது: ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாகலூா் அருகே சேவகானப்பள்ளியில் தனியாா் நிறுவனத்துக்கு உயா் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்காக ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக விளைநிலம் வழியாக மின் கோபுரம் கொண்டு செல்லக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு தனியாா் தொழில்சாலையின் சாலை வழியாக மின் கோபுரம் அமைக்க கொண்டு செல்லலாம். ஆனால், அதைத் தவிா்த்து 8 கி.மீ. தொலைவுக்கு விளைநிலம் வழியாக கொண்டு செல்ல மின்சார வாரியத்தினா் முயற்சி செய்கிறனா். இதற்காக விவசாயிகளை மிரட்டி வருகின்றனா்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பாகலூா் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனா். அவா்களை விடுவிக்க வேண்டும்.

உயா்அழுத்த மின் கோபுரம் அமைக்க விளைநிலத்தில் குழிகள் தோண்டக் கூடாது என நாங்கள் ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம். இன்னும் 3 நாள்களில் இது தொடா்பாக முடிவு எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் கூறியிருக்கிறாா். விளைநிலம் வழியாக மின்கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுத்தால் தி.மு.க. சாா்பில் தலைமைக் கழகத்தின் அனுமதி பெற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் எனக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com