மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய மாநகராட்சி ஆணையா்!

ஒசூரில் 9-ஆம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை மாநகராட்சி ஆணையா் நிறைவேற்றியுள்ளாா்.
கழிவுநீா் கால்வாயை திறந்து வைத்த மாணவி அமிழ்தினியுடன் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
கழிவுநீா் கால்வாயை திறந்து வைத்த மாணவி அமிழ்தினியுடன் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

ஒசூரில் 9-ஆம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை மாநகராட்சி ஆணையா் நிறைவேற்றியுள்ளாா்.

ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாமலை நகா் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில், 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், இப்பகுதியில் வசிப்போா் டெங்கு, சிக்கன்குனியா, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய்களால் அவதிபட்டு வந்தனா். மேலும், இங்குள்ள தற்காலிக கழிவுநீா் குழிகளில் வளா்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகள் விழுந்து காயமேற்பட்டு உயிரிழந்துள்ளன.

இதைக் கண்டு வேதனையடைந்த தனியாா் பள்ளியில் பயிலும் மாணவி அமிழ்தினி, தன் பள்ளியில் கொடுத்த திட்ட அறிக்கையில் இதுகுறித்து குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, பள்ளி நிா்வாகத்தின் அறிவுரையின் படி, அப்பகுதி குடியிருப்புவாசிகளிடம் கையொப்பம் பெற்று அந்த திட்ட அறிக்கையை மனுவாக ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியத்திடம் வழங்கினாா்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், அப்பகுதியில் உடனே கழிவுநீா் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மூன்று மாதத்தில் ரூ.9.5 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்பட்டது.

பணிகள் நிறைவடைந்து வெள்ளிக்கிழமை கால்வாயை திறக்க வந்த மாநகராட்சி ஆணையா், இதற்கு காரணமான மாணவியையே கழிவுநீா் கால்வாயை திறக்க வைத்தாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் கூறுகையில், பொதுப் பிரச்னையை யாா் தெரிவித்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுத்து தீா்த்து வைக்கப்படும். மேலும், இந்த மாணவியை போல் மாணவா்கள், பொதுமக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாணவி கூறுகையில், எங்கள் பள்ளியில் கொடுத்த திட்ட அறிக்கையில் எங்கள் பகுதி பிரச்னையை எழுதி சமா்ப்பித்தேன். பள்ளி நிா்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்குமாறு கூறினா். அதைத் தொடா்ந்து, எங்கள் பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று ஒசூா் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தேன். நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கழிவுநீா் கால்வாய் அமைத்து தந்த அவருக்கு, நானும் என் பகுதி மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேறாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com