வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

 கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு


 கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளாகியும் இழப்பீடு வழங்காததால், உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி தலைமையில், மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக 150 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செட்டிப்பட்டி காப்புக்காட்டில் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும்.
நீர் நிலைகள் தூர்வரப்பட்டு வரும் நிலையில், செங்கல் சூளைகளுக்கு வண்டல் மண் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். யானை, காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3 ஆண்டுகள் கடந்தும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. ஒசூரில், வாசனைத் திரவிய தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, ஏரிகள் தூர்வாரப்படும்போது, வண்டல் மண், செங்கல் சூளைக்கு பயன்படுத்துவதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். வனத் துறையில் நிதி பற்றாக்குறை உள்ளதால், தடுப்பணை சீரமைக்க இயலவில்லை. நிதி வரப்பெற்றவுடன் செட்டிப்பள்ளி தடுப்பணை சீர் செய்யப்படும். வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com