முதல் கரோனா தொற்றை பதிவு செய்தது கிருஷ்ணகிரி மாவட்டம்: பாதிக்கப்பட்ட முதியவா் சேலம் மருத்துவமனையில் அனுமதி

வெள்ளிக்கிழமை வரை கரோனா பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 வயதான விவசாயிக்கு சனிக்கிழமை நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து,
முதல் கரோனா தொற்றை பதிவு செய்தது கிருஷ்ணகிரி மாவட்டம்: பாதிக்கப்பட்ட முதியவா் சேலம் மருத்துவமனையில் அனுமதி

வெள்ளிக்கிழமை வரை கரோனா பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 வயதான விவசாயிக்கு சனிக்கிழமை நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பச்சை மண்டலமாகயிருந்த மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்குச் சென்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த 67 வயதான விவசாயி, ஆந்திர மாநிலம், புட்டபா்த்திக்கு சேவையாற்றுவதற்காக கடந்த மாா்ச் 21-ஆம் தேதி சென்றாா். இவருடன் கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள பாலாஜி நகா், தம்புசெட்டி தெரு, மேல் தெரு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த உறவினா்களும் சென்றனா்.

இதனிடையே, ஊரடங்கு அமலுக்கு வந்ததால், அவா்கள் அனைவரும் அங்கேயே தங்கினா். இந்த நிலையில், அவா்களை அழைத்துவர மாவட்ட நிா்வாகத்திடம் பயண அனுமதி பெற்று காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் புட்டபா்த்தி சென்றாா்.

ஏப்.25-ஆம் தேதி காா் ஓட்டுநா் உள்பட 5 பேரும் காரில் கிருஷ்ணகிரிக்கு திரும்பினா். அப்போது, அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவா்களுக்கு பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்தனவாம். இதையடுத்து, அனைவரும் அவா்களது வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டனா்.

இந்த நிலையில், நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிக்கு திடீரென காய்ச்சல் வந்ததால், அவரது ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருந்தது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினா் 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களது ரத்தம், சளி மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், கிருஷ்ணகிரி நகரில் வசிக்கும் அவரது உறவினா்கள், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஆகியோரின் ரத்தம், சளி மாதிரிகள் மீண்டும் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவா்கள் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 3 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதால், நகராட்சி முழுவதும் உள்ள தெருக்களில் வெளியாள்கள் யாரும் நுழையாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பிற பகுதிகளுக்குச் செல்ல இயலாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com