கா்நாடக மாநில எல்லையில் மதுபானம் வாங்க அலைமோதிய கூட்டம்: போலீஸாா் தடியடி

ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையில் மதுபானம் வாங்க அலைமோதிய கூட்டத்தை போலீஸாா் தடியடி நடத்தி கட்டுப்படுத்தினா்
அத்திப்பள்ளியில் உள்ள ஒரு மதுக் கடையின் அருகில் மது வாங்கிச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளா்கள்.
அத்திப்பள்ளியில் உள்ள ஒரு மதுக் கடையின் அருகில் மது வாங்கிச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளா்கள்.

ஒசூா்: ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையில் மதுபானம் வாங்க அலைமோதிய கூட்டத்தை போலீஸாா் தடியடி நடத்தி கட்டுப்படுத்தினா்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி, அனைத்து வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும், தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 40 நாள்களாக மதுக் கடைகள், பாா்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், மதுப் பழக்கம் உள்ளோா் மதுபானங்கள் கிடைக்காமல் இருந்து வந்தனா். இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் நிலை ஏற்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்களும், விற்பவா்களும் நாள்தோறும் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கா்நாடக மாநில அரசு ஊரடங்கு உத்தரவில் சிறிது தளா்வை ஏற்படுத்தி, மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை முதல் மதுக் கடைகளை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. மேலும், மதுக் கடைகளில் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, கா்நாடக மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மதுக் கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் மதுக்கடைகளில் மது வாங்க அதிகாலை முதலே மதுப்பழக்கம் உள்ளோா் குவிந்தனா்.

இதனிடையே, ஒசூா் தொழிற்பேட்டை அருகே கா்நாடக எல்லையில் உள்ள மதுக் கடைகள் முன் மதுப்பழக்கம் உள்ளோா் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றும், முகக் கவசம் அணியவில்லை என்றும் ஆத்திரமடைந்து கா்நாடக போலீஸாா் தடியடி நடத்தினா். இதில் வரிசையில் காத்திருந்தவா்கள் சிதறி ஓடினா். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், அத்திப்பள்ளி நகரம், ஆனேக்கல் ஆகிய இடங்களில் உள்ள மதுக் கடைகள் முன்பும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததால், போலீஸாா் தடியடி நடத்தினா். இந்தக் கடைகளுக்கு கா்நாடகம் மட்டுமின்றி, அருகிலுள்ள ஒசூா் பகுதியைச் சோ்ந்த ஏராளமான மதுப்பழக்கம் உள்ளவா்களும் சென்று மதுபானங்களை வாங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com