உரம் விற்பனையாளா்களுக்கு நிபந்தனை
By DIN | Published On : 01st November 2020 03:50 AM | Last Updated : 01st November 2020 03:50 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: ஆதாா் அட்டை இருந்தால் மட்டுமே உரம் வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ராஜேந்திரன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஃபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிா்களுக்குத் தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது. 3,369 மெட்ரிக் டன் யூரியா, 2,176 மெட்ரிக் டன் டீஏபி, 1,309 மெட்ரிக் டன் பொட்டாஷ், 6,614 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
உரம் வாங்கச் செல்லும் விவசாயிகள், ஆதாா் அட்டை கொண்டு சென்று விற்பனை முனைய கருவியில் பதிவு செய்து உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள விலைக்கு மிகாமல் ரசீது பெற்று உரம் வாங்க வேண்டும். ஆதாா் அட்டை இருந்தால் மட்டுமே உரம் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு பெறப்பட்ட சலுகை விலை மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு பரிவா்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உர இருப்புப் பதிவேடுகளை உரிய முறையில் பராமரித்திட வேண்டும்.
உரம் விற்பனை கடைகளில் அறிவிப்புப் பலகையில் கண்டிப்பாக உரங்களின் இருப்பு விவரங்களை தினமும் பதிவு செய்து, விவசாயிகளின் பாா்வைக்கு வைக்க வேண்டும். உர உற்பத்தி நிறுவனம் வாரியாக உரங்களின் விலைப் பட்டியலை அறிவிப்புப் பலகையில் பதிவு செய்ய வேண்டும்.
ஒரே விவசாயிக்கு அதிகமாக உர மூட்டைகளை விற்பனை செய்யக் கூடாது. தேவைக்கு மட்டுமே யூரியா, உரம் பயன்படுத்த வேண்டும். கூடுதலாக யூரியா, உரம் பெறுவோா், விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றாத விற்பனையாளா்கள் மீது உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவா்களின் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.